அன்பு கூர்ந்தார்!
எனது வேலையில் ஒரு மேல் அதிகாரி இருந்தார். அவர் கம்யூனிசவாதி மாத்திரமல்ல, கடவுள் இல்லை என்று வாதிடுகிற தீவிரமான நாத்திகராகவும் இருந்தார். நான் கர்த்தருடைய பணியை செய்தது அவருக்கு பெரும் எரிச்சலை தந்தது. “நான் மாத்திரம் ஒரு போலீஸ் அதிகாரியாய் இருந்தால், நீ தெருவிலே பிரசங்கம் பண்ணும் போது உன்னைப் பிடித்து அடித்து நொறுக்குவேன்” என்றார்.
நான் இருபத்தொரு நாட்கள் லீவு எடுத்து உபவாசித்தபின், எலும்பும் தோலுமாய் தாடியோடு அலுவலகத்திற்கு திரும்பி வந்தபோது என்னை “கிறிஸ்தவ நக்ஸலைட்” என்று அழைத்தார். அப்பொழுது, கிறிஸ்மஸ் பண்டிகை வந்தது. அவர் திடீரென்று என்மேல் அளவில்லாத அன்பு கூற ஆரம்பித்தார். என்னைக் கூட்டிக் கொண்டுபோய் என் குடும்பத்திற்கு நிறைய துணிமணிகள் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். பெரிய ஹோட்டலில் சிறந்த உணவு வகைகளை வாங்கிக் கொடுத்தார். அவருடைய திடீர் பாசத்தின் காரணம் தெரியாமல் தவித்தேன்.
அவர் சொன்னார், “எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு பர்மாவில் நான் சிறுவனாய் என் பெற்றோருடன் வாழ்ந்து வந்தேன். திடீரென்று ஏற்பட்ட உலகப்போரின்போது, என் பெற்றோர் குண்டு வீச்சினால் கொல்லப்பட்டார்கள். பெற்றோரை இழந்ததும் என் கோபமெல்லாம் கடவுள் பக்கமாய் திரும்ப, நாத்திகனாகினேன். அனாதையாநேன்.
அப்பொழுது கிறிஸ்மஸ் வந்தது. ஒரு கிறிஸ்தவ குடும்பத்தார் என்மேல் இரக்கம் பாராட்டி, தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். மாத்திரமல்ல, அவர்களுடைய பிள்ளைகளைப்போல, எனக்கும் உணவளித்து, துணிமணிகள் எடுத்துக்கொடுத்தார்கள். அந்த அன்பு எனக்கு நினைவு வந்தது. அந்த அன்புக்கு பதிலாக நான் ஒரு கிறிஸ்தவனிடம் அன்புகூற தீர்மானித்தேன். ஆகவே இதையெல்லாம் உனக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேன்” என்றார்.
பாருங்கள்; தான் பெற்ற அன்புக்கு எப்படியாவது பதில் அன்பு செய்யவேண்டும் என்று அவர் எண்ணி அந்த அன்பை செயலில் வெளிப் படுத்தினார். தேவபிள்ளைகளே, கிறிஸ்து நம்மில் அன்புகூர்ந்த படியினாலே, நாமும் நம்முடைய சகோதரரிடத்தில் அன்புகூர கடமைப் பட்டிருக்கிறோம் (1 யோவான். 3:16).
அன்பு கூர்ந்தார்!
Reviewed by Christking
on
August 06, 2017
Rating: