இவ்வளவாய் அன்புகூர்ந்தார்! - Christking - Lyrics

இவ்வளவாய் அன்புகூர்ந்தார்!


D.L. மூடி பக்தன், தன் ஊழியத்தின் ஆரம்ப காலத்தில், பொதுவாக நியாயத்தீர்ப்பைக் குறித்துப் பேசுவார். தேவன் பாவத்தை வெறுக்கிறவர் என்றும், தேவனுடைய கையில் நியாயத்தீர்ப்பின் பட்டயம் இருபுறமும் கருக்குள்ளதாய் இருக்கிறது என்றும் பிரசங்கிப்பார்.

ஆனால் ஒருநாள் அவர் மனைவி, “ஐயா, ஒரு வாலிபப் பிரசங்கியார், நம் பட்டணத்திற்கு வந்து, தேவ அன்பைப் பற்றி மனதுருக்கமாய் பேசுகிறார். மட்டுமல்ல, யோவான் 3:16-ஐ ஆதாரமாக வைத்து “இவ்வள வாய் அன்புகூர்ந்தார்” என்று செய்தியைக் கொடுக்கிறார்” என்றார்கள்.

கடைசி நாள் அந்த பிரசங்கத்தைக் கேட்க மூடி பக்தன் போயிருந்தார். “மூர் ஹவுஸ்” என்ற அந்த இளம் பிரசங்கியார் அன்று கூட யோவான் 3:16-ஐயே தெரிந்துகொண்டார். “ஜனங்களே, நான் கடந்த 16 நாட்களும் தேவன் எவ்வளவாய் அன்புகூர்ந்தார் என்று, தேவ அன்பை உங்களுக்குக் கூற முயன்றேன். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரைக்குமுள்ள தேவ அன்பை, முழுவதுமாய் என்னால் விவரிக்க முடியவில்லை.

ஒருவேளை, யாக்கோபின் ஏணி என்னிடமிருக்குமானால், அதில் ஏறி, பரலோக வாசலைத் தட்டி, காபிரியேல் தூதனை அழைப்பேன். என் ஜனங்களுக்கு தேவ அன்பை விளக்கிக் கூறுவாயா? என்று அவனிடம் கேட்பேன். அவன் என்ன சொல்லுவான் தெரியுமா? “தேவன் தம் ஒரே பேறான குமாரனை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று தான் சொல்லுவான். ஆம், “கர்த்தர் தம்முடைய குமாரனை நமக்காகத் தந்த அன்பை வர்ணிக்க அளவேதுமே இல்லை” என்றார்.

கூட்டத்திலிருந்த அனைவரும் தங்களைக் கல்வாரி அன்புக்கு ஒப்புக்கொடுத்தனர். கதறி அழுது கிறிஸ்துவின் அன்புக்கு தகுதியான வாழ்க்கை வாழ தங்களை அர்ப்பணித்தனர்!

D.L. மூடி பக்தன் மெய்மறந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவரது ஆவிக்குரிய மனமேட்டிமை உடைந்தது. என்ன வரங்கள், வல்லமைகள் இருந்தாலும் அவை கிறிஸ்துவின் அன்புக்கு ஒப்பான வைகள் அல்ல, என்பதை திட்டமாக அறிந்துகொண்டார். சிலர் தீர்க்கதரிசனங்களை மேன்மைப்படுத்துகின்றனர்! சிலர் விசுவாசம்தான் முக்கியம் என்கின்றனர்! ஆனால் எல்லாவற்றையும் விட, அன்பே பிரதானம்!

இவ்வளவாய் அன்புகூர்ந்தார்! இவ்வளவாய் அன்புகூர்ந்தார்! Reviewed by Christking on August 03, 2017 Rating: 5
Powered by Blogger.