பொறாமை இல்லை!
ஆமைகளில் கொடிய ஆமை, “பொறாமை” என்பது பழமொழி! பொறாமை உள்ளத்தை அரிக்கும் கொடிய புழு! பொறாமை மற்றவர் களுடைய பொருட்கள், வசதி, செல்வம் தனக்குக் கிடைக்காதா என்று ஏங்கும் பெருமூச்சு! பொறாமை, தன்னைவிட மற்றவர்கள் முன்னேறி விடக்கூடாதே என்று, குமுறும் சுயநல சிந்தை!
ஆனால் உள்ளத்தில் அன்பு வரும்போது, சூரியனைக் கண்ட பனிபோல் இந்த பொறாமை விலகி ஓடும்! அன்புள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடைய முன்னேற்ற வாழ்வைக் கண்டு, ஒருபோதும் பொறாமைக் கொள்ளுவதே இல்லை; மாறாக அதை அவர்கள் பெருமையாக எண்ணுவார்கள். நீங்கள் மற்றவர்களையும், உங்களது சொந்த பிள்ளைகளைப்போலவும், சகோதர, சகோதரிகளைப்போலவும் அன்புகூறும்போது, உங்கள் உள்ளத்தில் பொறாமை எழுவதே இல்லை!
தன்னைவிட, எதிர் வீட்டுக்காரனைக் கர்த்தர், எப்பொழுதும் இருமடங்கு ஆசீர்வதித்து வருவதைக் கண்ட விசுவாசி, எரிச்சலில் “ஆண்டவரே, எனக்கு ஒரு கண் குருடாகட்டும்” என ஜெபித்தாராம். ஏனென்றால், தனக்கு இருப்பதைப் போல் எதிர் வீட்டுக்காரனுக்கும் இரு மடங்கு கொடுப்பார்; அவனுக்கு இரண்டு கண்களும் குருடாகிவிடும் என்று எதிர்பார்த்தார்.
மறுநாள் இவருக்கு ஒரு கண் குருடானது. எதிர் வீட்டுக்காரனுக்கோ இரண்டு கண்களும் தெளிவாயிருந்தது. கர்த்தர் சொன்னார், “உனக்கு ஒரு கண்ணில் நல்ல பார்வை இருக்கிறது. அவனுக்கு இரட்டிப்பான ஆசீர்வாதமாகையால், அவனுக்கு இரண்டு கண்களிலும் பார்வை இருக்கிறது” என்றாராம்! ஆம், பொறாமை தன்னை அழித்து விடக்கூடிய கொடூரமானது. சாலொமோன் ஞானி பொறாமையை, “எலும்புருக்கி” என்று அழைக்கிறார்.
“கொடுமையுள்ளவன் மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே” (நீதி. 3:31).
பொறாமை இல்லை!
Reviewed by Christking
on
August 14, 2017
Rating: