சகலத்தையும் சகிக்கும்! - Christking - Lyrics

சகலத்தையும் சகிக்கும்!


கிறிஸ்து தமது அன்பினாலே, பாடுகளை எல்லாம் எப்படி சகித்தார் என்பதை ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு மிஷனெரி சொல்ல ஆரம்பித்ததும், ஒரு வாலிப நீக்ரோ பெண் அழுது கொண்டு வெளியே ஓடினாள்.

கூட்டம் முடிந்ததும் அவள் கைநிறைய பணத்தோடு திரும்பி வந்தாள். அதை அந்த மிஷனெரியிடம் பணிவோடு நீட்டி, “எனக்காக இரத்தம் சிந்திய இயேசுவுக்கு இந்தப் பணத்தையெல்லாம் காணிக்கையாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றாள்.

மிஷனெரி அந்தப் பணத்தை வாங்க தயங்கினார். “இந்தப் பெண்ணோ பரம ஏழை. சில்லறைக் காசுகள்கூட காணிக்கை தரமுடியாத வறுமை. அப்படியிருக்க, இவளுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது?” என்று எண்ணினார்.

அவள் சொன்னாள்: “ஐயா, நீங்கள் இயேசு எங்கள் மேல் அன்பு வைத்து அடிமையின் ரூபமெடுத்தார் என்று சொன்னீர்கள், என்னால் தாங்க முடியவில்லை. உடனே நான் ஓடிப்போய் தேயிலைத் தோட்ட முதலாளியிடம் என்னையே வாழ்நாள் முழுவதுமாக அடிமையாக விற்று விட்டேன். என்றென்றும் அடிமை வேலை செய்வதற்கு, அவர் கொடுத்த பணம்தான் இது!” என்றாள்.

அவர் கண்களில் கண்ணீர் ததும்பியது! அதை வாங்க அவர் கை கூசியது! “அம்மா, நான் இங்கிலாந்தை விட்டு மிஷனெரியாக ஆப்பிரிக்கா வந்ததுதான் பெரிய தியாகமென்று எண்ணினேன். நீ என்னை விட அதிக தியாகம் செய்து விட்டாயே” என்றார்.

ஆம், “அன்பு சகலத்தையும் சகிக்கும்...” (1 கொரி. 13:7). “சகிக்கும்” என்றால் “வேறு வழியின்றி சகிக்கும்” என்பது அர்த்த மல்ல, இதற்கு கிரேக்க மொழியில் “கூப்பொருமெனின்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு, பாடுகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, சகிப்பது என்பது அர்த்தமாகும்.

Tamil Christian Stories,
சகலத்தையும் சகிக்கும்! சகலத்தையும் சகிக்கும்! Reviewed by Christking on August 13, 2017 Rating: 5
Powered by Blogger.